February 17, 2020

தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி! மோடி அல்ல! தூத்துக்குடியில் மு.க. ஸ்டாலின் பேச்சு!

தூத்துக்குடி: மே 1-ம் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது கலைஞர் திமுக அரசு தான் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். 1806-ம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்டு தொழிலாளர்கள் உரிமைக்குரல் எழுப்பினர். அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் 10 மணி நேர வேலை என சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த வெற்றியுடன் தொழிலாளர்களின் போராட்டம் முடியவில்லை. 

1886-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒன்றுபட்ட வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அமெரிக்காவின் தொழில் நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக தொழிலார்கள் போராடினர். அப்போதுதான் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் உலகின் முதல் தொழிலாளர் இயக்கம் உருவாக்கப்பட்டது. தொடர் போராட்டத்தால் 1890-ம் ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1-ம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி நடைபெற்றது. பேரணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிகப்பு நிற சட்டை அணிந்தும், எம்.பி கனிமொழி சிகப்பு நிற புடவை அணிந்தும், திமுக தொண்டர்கள் சிகப்பு நிற சட்டை அணிந்தும் பங்கேற்றனர். பேரணியில் பேசிய மு.க. ஸ்டாலின், நாட்டின் 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் 4,5 கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் பல நாட்கள் டெல்லியில் போராடிய விவசாயிகளை ஆறுதலுக்காக கூட பிரதமர் அழைக்கவில்லை என்றார். தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்றும் தெரிவித்தார். தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன மே 23-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இதற்கு விடிவுகாலம் வரும் என்றார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து: 
தொழிலாளர்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் எப்போதும் திமுக திகழும். புதிதாக மத்தியிலும், மாநிலத்திலும் அமையப் போகும் ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றவும், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசிடம் இழந்து விட்ட உரிமைகளை மீட்கவும் திமுக சபதம் ஏற்றுள்ளது என தொழிலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.