April 6, 2020

வட்டத்துக்குள் என்னை அடைக்காதீர்கள்! – தமன்னா பேட்டி

விளம்பரங்கள் வழியே பதினைந்து வயதில் பாலிவுட்டில் கால் பதித்து, 16-வது வயதில் ‘கேடி’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் தமிழில் தனது கணக்கைத் தொடங்கியவர் தமன்னா. பின்னர் பாலிவுட் கண்டுகொள்ளாவிட்டாலும் இவருக்குக் கைகொடுத்தது என்னவோ தமிழ், தெலுங்குப் படங்கள்தாம். ‘கிளாமர் பொம்மை’ பிம்பத்தைத் தாண்டி, தானொரு சிறந்த நடிகை என்பதை ‘தர்மதுரை’ உள்ளிட்ட சமீபகாலப் படங்களில் வெளிப்படுத்திவரும் தமன்னாவிடம் உரையாடியதிலிருந்து…

இடைவெளி கொடுக்காமல் படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே?

நடிகையாக  அறிமுகமாகி இத்தனை வருடங்கள் கடந்துவிட்டதா என்றெல்லாம் நான் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்த அளவுக்கு நடிப்பின் மீது பைத்தியமாகிவிட்டேன். நடிகையாகப் புகழ்பெற்றால் மட்டும் போதும் என்றுதான் வந்தேன். ஆனால், இவ்வளவு பெரிய நடிகையாக வருவோம் என்றெல்லாம் எதிர்பார்க்க வில்லை. ஒரு கட்டத்துக்குப்பின் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. என் அதிர்ஷ்டம், இயக்குநர்களிடம் நான் கெஞ்சவோ கோரிக்கை வைக்கவோ அவசியமில்லாதபடி, நல்ல கதாபாத்திரங்களை எனக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

முதன்முறையாக சுந்தர். சி இயக்கத்தில் நடிப்பது பற்றி…

அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படத்தின் கதையைக் கூறிவிட்டு, அதில் இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கின்றன. உங்களுக்கு எந்தக் கதாபாத்திரம் வேண்டும் என்று கேட்டார். நான் சவாலானதைத் தேர்வு செய்தேன்.

ஹீரோ விஷாலுக்கு ஈடுகொடுக்கும் கதாபாத்திரம். ஆல் கிளாஸ் ஆடியன்ஸுக்கும் படமெடுப்பவர் என்று பெயர் பெற்றவர் சுந்தர்.சி. அப்படிப்பட்ட இயக்குநர், அந்த இமேஜை மாற்றுகிற மாதிரியான ஒரு கதையை முதல்முறையாக எடுக்கும்போது அதில் எனக்கு இடமளித்திருப்பது என் மீது இயக்குநருக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அதற்குத் தலைவணங்குகிறேன்.

சவாலான கதாபாத்திரங்கள் உங்களுக்கு வரத் தொடங்கியிருப்பது ‘பாகுபலி’ படத்துக்குப் பின்னர்தானே?

உண்மைதான். இப்போதுகூட ‘சைரா’ படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் அதே அளவுக்குப் பேசப்படும் என்று நம்புகிறேன். ‘பாகுபலி’ படத்தில் எனது காட்சிகள் அனைத்துமே சவாலான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.  என்னைவிட அவந்திகாவை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயக்குநர் ராஜமௌலி நம்பினார்.

அது நடந்தது. அப்படம் வெளியானபோது, ‘தோழா’ படத்துக்காக ஐரோப்பா செல்லத் தயாரானேன். விசா தாமதமானதால் மும்பையில் காத்திருந்தேன். அன்றைக்கு  நான் வெளியே சென்றபோது, ரசிகர்கள் என்னைப் பார்த்த பார்வை மாறியிருந்தது. அன்று ஒரு திரையரங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்து கழுத்து வலியை மறந்து வாய்பிளந்து ஆச்சர்யமாகப் பார்த்தேன்.

குடும்பம் – நண்பர்களோடு நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

கொஞ்சம் வருத்தம்தான். இதுதான் நமக்கான நேரம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதே வேளையில் நண்பர்கள், குடும்பத்தினரைப் பார்க்கும்போது போனை ஆஃப் பண்ணிவிடுவேன். அந்த நேரம் அவர்களுக்கானது. சில நடிகைகள் ஒரு படம் முடிந்தவுடன் சுற்றுலா செல்வார்கள். ஆனால், ஒரு வாரம் ஏதேனும் வேலை செய்யவில்லை என்றால் நான் சோகமாகிவிடுவேன். கேமரா முன்னால் நடிப்பது அவ்வளவு பிடிக்கும்.

திரையுலகில் உங்களுக்கு நெருங்கிய தோழி யார்?

ஸ்ருதி ஹாசன் என் நெருங்கிய தோழி. இருவரும் சந்தித்தால் படத்தைப் பற்றிப் பேசமாட்டோம். வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு பேசுவோம். தனுஷ், ராணா, காஜல் அகர்வால் எனச் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் ராணா அனைவருக்குமே உதவி செய்யும் ஒரு நல்ல நடிகர். அவர் எனக்கு மட்டும் நண்பர் அல்ல, திரையுலகில் பலருக்கும் நல்ல நண்பர்தான்.

பிரபுதேவா இயக்கத்தில் ‘காமோஷி’ இந்திப் பட அனுபவம் எப்படியிருந்தது?

அதில் காது கேட்காத, வாய் பேச முடியாதவராக நடித்துள்ளேன். மிகவும் கஷ்டமான கதாபாத்திரம். மற்ற படங்களில் நடிப்பதுபோல், அவ்வளவு எளிதாக அதில் நடித்துவிட முடியவில்லை. முற்றிலும் மாறுபட்ட நடிப்பை என்னால் கொடுக்க முடிந்திருக்கிறது. காது கேட்காத, வாய் பேச முடியாதவராக நான் நடிப்பது நம்பகமாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கப் படப்பிடிப்புத் தளத்திலேயே ஒருவர் இருப்பார். போதிய பயிற்சிக்குப் பிறகே  நடித்தேன். கண்டிப்பாக அதற்கான பெயர் கிடைக்கும் எனக் காத்திருக்கிறேன்.

பல மொழிப் படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்திவருவது கடினமாக இல்லையா?

எந்த மொழியில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல; சரியான கதையில் நடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். சரியான கதையைத் தேர்ந்தெடுத்தாலே, அது வெற்றியடைந்துவிடும். அப்போது அதில் நமது பங்களிப்பும் பேசப்பட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published.